சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனியார் ஆங்கில நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணல் பேட்டியின்போது, பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் அனைவரும் மத்திய அரசின் வளர்ச்சி திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்துகிறது என்றும், தி.மு.க.வை வாரிசு கட்சி என்றும், ஊழல் கட்சி என்றும் பிரதமர் மீண்டும் விமர்சிப்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "பொதுவாக மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் நம்மை விமர்சனம் செய்யும்போது ஒரு சில பொய்களையும் மற்றும் தவறான தகவல்களையும் வெளியிடுவது வழக்கம். ஆனால், பிரதமர் போன்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அப்படிச் செயல்படமாட்டார்கள்.
ஜவர்கலால் நேரு முதல் டாக்டர்.மன்மோகன் சிங் வரை இருந்த பிரதமர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாஜக நிர்வாகிகளும் தவறான தகவல்களைச் சொல்பவர்களாகவும், வதந்திகளை சமூக வலைதளங்கள் வழியாகப் பரப்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற பாஜக நிர்வாகிகளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்பினால் பதில் இருக்காது. அடுத்ததாக மற்றொரு வதந்திக்கோ, விமர்சனத்திற்கோ தாவி விடுவார்கள்.
மத்திய அரசின் எந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முடக்கியது என்று கேட்டால் அதற்குப் பதில் வராது. காரணம், மத்திய அரசின் பங்களிப்போடு நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு அரசுதான் பங்களிப்பைக் கூடுதலாகச் செலுத்தி, அதனை நிறைவேற்றி அதற்காக மத்திய அரசின் விருதுகளையும் பெற்றுள்ளது. இது பிரதமர் மற்றும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் திமுக மீது வாரிசு அரசியல், ஊழல் முறைகேடு என்று திசைதிருப்பும் விமர்சனங்களை வைப்பது வழக்கமாகிவிட்டது.
நான் கலைஞரின் மகன்தான். அவருடைய கொள்கை வாரிசுதான். அந்த அடிப்படையில்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பாஜக வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகளுக்குப் பிரதமரும் அவரது கட்சி நிர்வாகிகளும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு எனத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ள நிதியும் பாஜக-வின் உண்மை முகம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறதே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஊழலை சட்டப்பூர்வமாகச் செய்வதே பாஜகவின் பாணியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “பாசிச பாஜகவை முறியடிக்கும் சக்தி மு.க.ஸ்டாலின் மட்டுமே” .. ஆ.ராசா பேச்சு!