திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன் குடியிருப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. காட்டு யானைகள், கரடிகள், காட்டு பன்றிகள், மிளா போன்ற வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக ஊருக்குள் வந்து செல்லும் அபாயகரமான கிராமமாக இந்த கிராமம் உள்ளது.
இங்குள்ள மக்கள் முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இங்கு ஏறத்தாழ சுமார் 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் 500 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக, இங்கு கரும்பு பிரதான பயிராக பயிரிடப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் கரும்பு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி பல்வேறு வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் வரை கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், அனவன் குடியிருப்பு கிராமத்தில் கடந்த 10 மாதங்களாக கரும்பு பயிர்களை பயிரிட்டு பராமரித்து வந்தனர்.
வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அவ்வப்போது பயிர்களை நாசம் செய்வதால் தினந்தோறும் விவசாயிகள் இரவு வயலிலே தங்கி இருந்து தங்கள் பயிர்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் 10 மாதமாக குழந்தையைப் போல் பாதுகாத்து வந்த கரும்பு பயிர்களை தற்போது பெய்த மழை, வெள்ளம் ஒரே நாளில் அடித்துச் சென்ற சம்பவம் விவசாயிகளை பெறும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனவன் குடியிருப்பு கிராமத்தில் வயலுக்கு நடுவே செல்லும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் நேற்று முன்தினம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கில், கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்ததால், அருகில் உள்ள வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில், கால்வாய் ஓரம் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்களை வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.
20 நாட்களில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில், கரும்பு பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பொன்னுச்சாமி நம்மிடம் கூறுகையில், "எங்கள் பகுதியில் உள்ள கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் வயலுக்குள் தண்ணீர் புகுந்து கரும்பு பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். ஆனால் தற்போது வரை கால்வாய் அடைப்பை சரி செய்யவில்லை. விவசாயத்தை மட்டுமே நாங்கள் நம்பி வாழ்ந்து வருகிறோம். எனவே, அரசு எங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மோசமான வானிலை; சென்னை டூ தூத்துக்குடி விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
இது குறித்து விவசாயி ஜெயபாண்டி கூறுகையில், "சுமார் ரூ.75 ஆயிரம் செலவு செய்து கரும்பு பயிரிட்டேன். தற்போது வெள்ளத்தில் கரும்பு பயிர்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிர்களை விற்பனை செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று ஆசையோடு இருந்தோம். ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என வேதனையோடு தெரிவித்தார்.