தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் வருடத்தின் பல்வேறு மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதனால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். இதனால் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
இதனால், பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது. வழக்கம்போல், அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. பின்னர் கடற்கரை மணலில் விளக்குகள் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக திருச்செந்தூர் - நாகர்கோவில் சாலையில் கோயில் அருகிலும் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்தில் வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியிலிருந்து அய்யா வைகுண்டர் கோவில் வரை சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தது. இதையறியாமல் பாறைகளின் மேல் ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தற்போது, ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கோயிலை சுற்றியும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்; அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு!