சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் கடந்த வாரம் இலங்கை பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து அவரிடமிருந்து கழிவறையில் மறைத்து வைத்திருந்த 1.6 கிலோ கடத்தல் தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.
அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் அதிகாரிகள் சோதனையிட்டதுடன், அந்த கடையை நடத்தி வரும் யூ-டியூபா் சபீர் அலி என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.
சபீர் அலி மூலம் தான் இது போன்ற டிரான்சிட் பயணிகள் கடத்தி கொண்டு வரும் தங்கத்தை வெளியில் கைமாற்றியது தெரியவந்தது. சபீர் அலி, கடந்த பிப்ரவரி மாதம் பல லட்சம் ரூபாய் முதலீட்டில் விமான நிலைய ஆணையத்தின் உரிய அனுமதியுடன் தொடங்கிய இந்த கடையில் 7 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுதியுடன் கூடிய பிசிஏஎஸ் அனுமதி அட்டைகளையும் சபீர் அலி பெற்றுக் கொடுத்துள்ளார். இவா்களைப் பயன்படுத்தி, கடந்த 2 மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து கடத்தி கொண்டு வரும் தங்கத்தை, விமான நிலைய கழிவறையிலிருந்து உடலில் மறைத்து வைத்து சுங்கத்துறை சோதனை இல்லாமல், விமான நிலையத்தின் வெளியே உள்ள கடத்தல் கும்பலிடம் சபீர் அலி கொடுத்து அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இலங்கை பயணி, சபீர் அலி மற்றும் அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியா்களைக் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சபீர் அலி கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர் விமான நிலையத்தில் கடை தொடங்குவதற்கு Vidvedaa PRG என்ற நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பாஜக பிரமுகர் ப்ரித்வி என்பவர் அனுமதி பெற்றுக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சென்னை மண்ணடியில் உள்ள ப்ரித்வி வீட்டிலும், விமான நிலையத்தின் கடைகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் 2 பேர் வீடுகளிலும், சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு (ஏர் இன்டெலிஜென்ட்) அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
ப்ரித்வி விசாரணையில், அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப்ரித்வியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ட் பிரிவு, ப்ரித்வி நாடு திரும்பினால் அவரைப் பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களில் இந்த கும்பல் மூலம் கடத்தப்பட்ட ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்வது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதே நேரத்தில் விமான நிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள், கைபேசி உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து, இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வரும் நபரான ப்ரித்வி சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “கடந்த ஜூன் 12ஆம் தேதியே அந்த நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்துவிட்டதாகவும், தனக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
மேலும், எந்தவித ஆதாரமும் இன்றி தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை. நான் கடந்த ஜூன் 9, 2024 அன்று எனது வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கினேன். தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்தை மீறி போலீசில் புகார் அளித்த இளைஞர்; குடும்பமே ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு - நாகையில் அதிர்ச்சி சம்பவம் - NAGAPATINAM SP OFFICE