சென்னை: சென்னையிலிருந்து லண்டன் (பிரிட்டிஸ் ஏர்வேஷ்) மற்றும் சிங்கப்பூர் (ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) செல்லும் விமானங்கள் புறப்படும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 505 பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.
லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்னைக்கு தினமும் அதிகாலை 3.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், இந்த விமானம் மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், இந்த விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்வதற்காக 317 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே வந்து விட்டனர்.
ஆனால், லண்டனில் இருந்து சுமார் 300 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம், சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, அதன் பின்னர் விமானம் சென்னைக்கு தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காமராஜர் அளித்த வாக்குறுதி.. 60வது ஆண்டில் தருமபுரி!
இதன் காரணமாக, சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு லண்டனுக்கு புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனவும் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதன் பின்பு, அந்த விமானம் சுத்தப்படுத்தப்பட்டு சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த 317 பயணிகளுடன் 5 மணி நேரம் தாமதமாக காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றது.
இதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்தே தாமதமாக சென்னைக்கு வந்ததால், சென்னையில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 188 பயணிகள் சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பின்னர் 188 பயணிகளுடன் சுமார் 4 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தாமதமானதால் சென்னை விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்