திருச்சி : கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், பலத்த காயமடைந்த 3 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம், சென்னை சென்ட்ரலில் இருந்து தர்பாங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட துறைகள் ஈடுபடுத்தப்பட்டு முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறன்றன.
ராகுல்காந்தி விமர்சனம் : நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ரயில் விபத்து தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒடிசா மாநிலம், பாலசோரில் நடந்த ரயில் விபத்து போலவே சென்னை அருகே கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்துள்ளது. பல ரயில் விபத்துகள் ஏற்பட்டும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை. ரயில் விபத்துகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும் என எதிர் பார்க்கிறது?" என்று பதிவிட்டு மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க : மாமல்லன் இறங்குனா மாஸ் தான்! - தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
ராகுல் காந்தி விமர்சனத்திற்கு மத்திய இணையமைச்சர் பதில் : ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பெருமாளை வழிபடும் வைசிய குலத்தைச் சேர்ந்த நாங்கள் நான்கு வாரம் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டது மிகுந்த பாக்கியமாக கருதுகிறேன். திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோன்று திருச்சி விமான தொழில்நுட்பக் கோளாறு குறித்தும் விசாரணை நடைபெற்ற வருகிறது. விசாரணை முடிவில், விபரம் தெரியவரும். கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்தில் ராகுல்காந்தி அரசியல் செய்யக்கூடாது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ராகுல்காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து குறைந்துள்ளது.
ரயில்வே துறையினர் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றி வருகின்றனர். வந்தே பாரத் ரயில் தொடங்கி புல்லட் ரயில் வரை அதிகமான ரயில்வே நெட்வொர்க்கை வைத்துள்ளது இந்தியா தான். பிரதமர் மோடி ரயில்வே துறையை உயர்ந்த தரத்திற்கு உயர்த்தி உள்ளார். ரயில்வே பாதுகாப்பு கவசங்களுக்கு கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறிய விபத்தை வைத்து ரயில்வேயை குறை கூற முடியாது. ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்