தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தஞ்சை 30வது தொகுதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது தஞ்சை நாடாளுமன்ற தொகுதி.
கடந்த மாதம் ஏப்ரல் 19 இல் ஒரே கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, பாஜக சார்பில் மாநில பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம், தேமுதிக சார்பில் அக்கட்சியின் தஞ்சை மாநகர நிர்வாகி சிவநேசன் ஆகியோர் களம் கண்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் .ஹிமாயூன் கபீர் போட்டியிட்டுள்ளார்.
குறைந்த வாக்குப்பதிவு: தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,01,226. இவர்களில் 10,24,949 பேர் தேர்தலில் தங்களது வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 68.27%
இதுவே 2019 மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மொத்தம் 10,60,.052 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 5,88,978 (55.60%) வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் அபார வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் நடராசன், 2,20,849 (20.85%) வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட முருகேசன் 1,02,871 வாக்குகளை (9.71%) பெற்றார்.
வெற்றிக்கான காரணம்: திமுக கூட்டணி பலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர், அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர், முன்னாள் மத்திய அமைச்சராக இருந்து பணியாற்றியவர், 9 முறை எம்பி தேர்தலில் போட்டியிட்டு 6 முறை வெற்றிப் பெற்ற அனுபவம் உள்ளிட்டவை பழனிமாணிக்கத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
புதுமுக வேட்பாளர்கள்: திமுக தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்துவரும் முரசொலி, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நன்கு அறிமுகமானவர். இவரது தந்தை சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். திமுக கூட்டணி பலம் மற்றும் திமுக குடும்ப பராம்பரிய அடையாளத்துடன் இத்தேர்தலில் களம் கண்டுள்ளார் முரசொலி. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர் முரசொலியை, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி'யுடன் ஒப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசன், நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் பொறுப்பு வகித்தவர் என்ற அடையாளத்துடனும், அதிமுக கூட்டணியை நம்பியும் புதுமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவரை போன்றே, கல்வியாளரான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீரும் புதுமுக வேட்பாளராக களம் கண்டுள்ளார்.
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் தஞ்சையில் வசித்து வந்தாலும், அவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோடை. 2014 எம்.பி. தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தற்போது மீண்டும் இங்கு போட்டியிட்டுள்ளார்.
நூதன பிரசாரம்: தேர்தல் பிரசாரத்தின்போது திமுக வேட்பாளர் முரசொலி வயலில் நாற்று நட்டு வாக்காளர்களை கவர்ந்தார் என்றால், மாட்டு வண்டி, குதிரை வண்டியில் சவாரி செய்து பொதுமக்களை கவர்ந்தார் பாஜக வேட்பாளர் முருகானந்தம்.
மறுபுறம் தேமுதிக வேட்பாளர் சிவநேசன் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்றும், டீக்கடையில் மாஸ்டராக மாறியும் வாக்காளர்களை ஈர்த்தார். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இறைச்சிக் கடை, டீக்கடை உள்ளிட்ட இடங்களில் நூதன பிரசாரம் மேற்கொண்டார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர்.
இதையும் படிங்க: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீர் கோளாறு..காரணம் என்ன?