சென்னை: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 18வது மக்களவைத் தேர்தல் திருவிழாவின் உச்சக்கட்டமான வாக்குப்பதிவு, நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 135 பேர் மட்டுமே பெண்கள்.
79 முஸ்லீம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 890 பேர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக அசாமின் திருப்ருகர் மற்றும் நாகலாந்து தொகுதிகளில் 3 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
அதிக வயதான வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் சித்தி தொகுதியில் 83 வயதான (Eldest Candidate) பகவான் பிரசாத் திவாரி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். குறைந்த வயது வேட்பாளர்களாக (Youngest Candidate) தமிழ்நாட்டில் 25 வயது வேட்பாளர்கள் 6 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே சுயேட்சையாக களம் காண்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 30 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொள்கின்றனர். முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்வோரில், 450 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இவர்களில் தமிழ்நாட்டில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் ரூ.662 கோடி சொத்து மதிப்புடன், தமிழ்நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராக உள்ளார்.
இவரைத் தவிர, சிவகங்கைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் (ரூ.304 கோடி), வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் (ரூ.152 கோடி) , சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் (ரூ.96 கோடி ) சொத்து மதிப்புடன் உள்ளனர். 10 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்து எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி: 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் 4 முனைத் தேர்தலாக உள்ளது. மாநிலத்தில் ஆளும் திமுக இந்தியா கூட்டணியை முன்னின்று வழி நடத்துகிறது. கடந்த தேர்தலில் ஒரே கூட்டணியாக இருந்த அஇஅதிமுக மற்றும் பாஜக தனித்தனியே கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் தன்னை தலைமையாக நிறுவும் போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக முதல் தேர்தலை எதிர்கொள்ளும் அண்ணாமலைக்கும் இந்த தேர்தல் அமில சோதனை தான்.
இது தவிர, 15 வருடங்களுக்கு மேலாக கட்சி நடத்தி எந்த கூட்டணியும் இன்றி தேர்தலைச் சந்திக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானும் களத்தில் உள்ளார். வாக்குகள் சிதறும் போது, இவரது வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
எப்படி இருக்கிறது திமுக கூட்டணி? கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 39இல் 38 தொகுதிகளை வென்ற அதே கூட்டணி தற்போதும் தொடர்வதால் இந்த முறை சற்று கூடுதல் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவையே பிரதான எதிரியாக முன்னிறுத்தி பிரசாரங்ளை முன்னெடுத்து வருகிறார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மாநில அரசின் சாதனைகளை முன்னிறுத்தி வாக்குகளை கேட்கும் மு.க.ஸ்டாலின், மாநிலத்தை பாஜக தொடர்ந்து புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வருகிறார்.
பிரதமரின் தமிழ்நாட்டு பயணங்களை விமர்சித்தும், மழை, வெள்ள காலங்களில் ஏன் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பும் விதமாக ஸ்டாலினின் பிரசார வியூகம் உள்ளது. திமுகவின் நட்சத்திர பேச்சாளரான உதயநிதி ஸ்டாலின், மாநில அரசுக்கான நிதிப்பகிர்வை குறிப்பிடும் வகையில் 29 பைசா மோடி என குற்றம் சாட்டி பிரசார களத்தை அனல் பறக்க வைத்தார்.
அதிமுக மீதான விமர்சனம் கூட, பாஜக உடனான அந்த கட்சியின் உறவை சாடும் வகையிலேயே உள்ளது. தேர்தல் களம் குறித்து அசாத்திய நம்பிக்கையில் இருக்கும் திமுக 11 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அத்தோடு 6 சிட்டிங் எம்.பி.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சவாலை சமாளிக்குமா அதிமுக கூட்டணி? 2014 ம் ஆண்டு முதன்முறையாக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி களமிறங்கிய போதே, அந்த மோடியா? இந்த லேடியா? என சவால் விட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் நடத்தி வென்று காட்டியவர் ஜெயலலிதா. ஆனால் இன்று, பிரதமர் நரேந்திர மோடி, தனது தேர்தல் பிரசாரத்தில் கூட, ஜெயலலிதாவை அம்மா என குறிப்பிட்டு வாக்கு கேட்கிறார். அத்தகைய ஜெயலலிதா என்ற தலைவர் இல்லாத அதிமுக, விஜயகாந்த் இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்கிறது.
பிரசாரத்தின் துவக்கத்தில், மத்திய அரசையோ , பிரதமர் மோடியையோ விமர்சிப்பதில்லை என்பது எடப்பாடி பழனிசாமி மீதான திமுகவின் குற்றச்சாட்டாக இருந்தது. பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டிய போது அதனையும் அடித்து நொறுக்கி, பிரதமர் மோடி மீது நேரடியான விமர்சனங்களை எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி. ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? என கேள்வி எழுப்பியது, பிரசார களத்தில் கவனம் ஈர்த்தது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நியமனத் தலைவர் என சாடிய எடப்பாடி பழனிசாமி, பாஜக திடீர் தலைவர்களை ஊக்குவித்து அதிமுகவை சீண்டி வருகின்றனர், இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். அதே நேரத்தில் ஆங்கில நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்பதையே பதிலாகக் கொடுத்தார்.
அண்ணாமலைக்கு அமில சோதனையா? பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறார். மாநில தலைவராக பொறுப்பேற்றது முதலே அதிமுக கூட்டணியில் ஆர்வம் காட்டாத அண்ணாமலை, ஜெயலலிதா போன்ற தலைவர்களை விமர்சித்ததால் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டு, அதிமுக தனித்து போட்டியிடும் முடிவுக்கு வந்தது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வைத்த முக்கியமாக நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதாக தகவல் வெளியானது.
அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகளும் அண்ணாமலையைத் தான் நேரடியாகச் சாடுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, திமுகவுக்கு சரியான, வலிமையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என அறைகூவல் விடுத்து வேலை பார்க்கிறது. இதன் மூலம் வாக்கு வங்கியை கணிசமாக அதிகரித்து தமிழ்நாட்டில் வலிமையாக கால் ஊன்ற வேண்டும் என்பதே அக்கட்சியின் வியூகமாக உள்ளது.
தேர்தல் பரப்புரைக்காக கடந்த 3 மாதங்களில் 7 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். இது தவிர ராஜ்நாத்சிங், அமித் ஷா போன்ற தலைவர்களும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளெல்லாம் சென்று பிரசாரம் செய்துள்ளனர். அண்ணாமலையைப் பொறுத்தவரையிலும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்புகள் குறித்த கணிப்புகளைப் பற்றி கவலைப்படாமல், முனைப்புடன் வேலை பார்த்துள்ளார்.
நெல்லையில் நயினார் நாகேந்திரன், தர்மபுரியில் சௌமியா அன்புமணி, கடந்த தேர்தலில் கதிர் ஆனந்துக்கு கடுமையான போட்டி அளித்த ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் பாஜகவின் நம்பிக்கை நட்சத்திர பட்டியிலில் உள்ளனர்.
என்ன செய்யப்போகிறார் சீமான்? 2010ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியைத் துவங்கிய சீமான், 2016 முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இவரது கட்சி 3.90 % வாக்குகளைப் பெற்றது. நடப்பு தேர்தலில் சீமானுக்கு கட்சிக்கான சின்னம் பெறுவதே சவாலானதாக இருந்தது. கடந்த தேர்தல்களில் அவர் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகாவில் உள்ள பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு வழங்கப்பட்டது. மாறுதலாக மைக் சின்னம் கிடைத்திருந்தாலும், இதனையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது அவர்களின் கட்சி.
பொதுவாகவே நாம் தமிழரின் வாக்கு வங்கியாக இளைஞர்களும், முதன்முறை வாக்காளர்களும் இருப்பதால், சின்னத்தை கொண்டு சேர்ப்பதற்கான வேலை கடினமானதாக இல்லை. சுமார் 4 சதவீத வாக்குகள் என்பது கணிசமானதாக இல்லை என்றாலும், கடினமான போட்டி நிலவும் தொகுதிகளில் இவரது கட்சி பெறும் வாக்குகள், வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடியதாகக் கூட அமையலாம் என்பதால் கவனம் பெறுகிறார் சீமான்.
இதையும் படிங்க: தருமபுரியில் விட்டதை பிடிக்க முயலும் பாமக.. தக்க வைக்குமா திமுக? - ரேஸில் முந்துவது யார்? - Lok Sabha Election 2024