தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மேலாளராக பணியாற்றி வந்த தினசீலன், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில், அதே விடுதியில் இன்று (மே 29) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், அதியமான் காலனியைச் சேர்ந்தவர் தினசீலன் (31). இவர் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி, விடுதியிலேயே மேல் மாடியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த லாட்ஜ் பணியாளர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தஞ்சை தடய அறிவியல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தினசீலனின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது சகோதரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த தினசீலன், தற்போது விடுதியில் பணியாற்றி வந்த நிலையில், அங்கும் 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இழந்ததால் தினசீலன் விரக்தியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.