நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் வரும் 10ஆம் தேதி துவங்க உள்ள 16வது ரோஜா கண்காட்சிக்காக தயாராகி வரும் பூங்காவில், வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல வண்ண ரோஜா மலர்களால் யானை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் அலங்கார வடிவமைப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த நேரங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி ஆகிய மூன்று கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, வரும் மே 10ஆம் தேதி நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 16வது ரோஜா கண்காட்சி துவங்க உள்ளது. 10ஆம் தேதி துவங்கும் ரோஜா கண்காட்சி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, பல ரகங்களில் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்நிலையில், ரோஜா கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப் பணிகளைக் கவரும் வகையில், வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் வனவிலங்குகளான யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு, வரையாடு, கழுகு உள்ளிட்ட வன விலங்குகளின் அலங்கார வடிவமைப்புகள் அமைக்கும் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ரோஜா கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு ரோஜா மலர்கள் விருந்தளிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10ஆம் தேதி விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், 18ஆம் தேதி பணி நாளாகச் செயல்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “சென்னை ஐஐடியில் படித்தவர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு”.. இயக்குனர் காமகோடி உறுதி! - IIT Madras