திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியில் ஏஜாஸ் மற்றும் இர்பான் ஆகியோருக்குச் சொந்தமான மரப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. மேலும், தொழிற்சாலையின் பின்புறம் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோனும் உள்ளது.
இந்நிலையில், தொழிற்சாலையின் பின்புறம் ஏரிக் கால்வாயில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இந்த தீயானது, தொழிற்சாலையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடோனில் உள்ள பிளாஸ்டிக், தோல் மற்றும் மரப்பொருட்களிலும் பரவியது, சிறிது நேரத்தில் தீ தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காணப்பட்ட நிலையில், இத்தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால், தீயை அணைக்க முடியாததால், ஆம்பூர் தீயணைப்பு வாகனம் மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தொழிற்சாலையின் பின்புறம் அதிக அளவு தீப்பற்றி எரிந்த நிலையில், அப்பகுதி பொதுமக்களே கடப்பாரை கொண்டு சுவரை இடித்துத் தள்ளி தீயை அணைக்க உதவி செய்தனர்.
ஆனால், அதற்குள் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், இந்த தீ விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர், அண்ணா குறித்து சர்ச்சை பேச்சு.. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல்! - Annamalai Cases