புதுக்கோட்டை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக இல்லை. அதனுடைய வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிசாமியின் விரக்தி பேச்சு. ஒரு இயக்கத்தை அழிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது. தலைமை பலவீனமாக உள்ளபோது அதுவே அழிந்துவிடும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தற்போது பலவீனமாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த புலம்பல்.
திமுக கூட்டணி உடைந்து விடும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது. அவருக்கு வேறு வேலை இல்லை, திமுக கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது எல்லாம் அவர் சார்ந்த கட்சிக்கு வேண்டுமானால் ஏற்படும் திமுக-வுக்கு ஏற்படாது. திமுக கூட்டணி எந்த சூழ்நிலையிலும் உடையாது" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, தமிழக ஆளுநரை மாற்றப் போவதாக வெளிவரும் தகவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "தமிழக ஆளுநரை மாற்றப் போவதாக வந்திருக்கும் தகவலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆளுநரை மாற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியை போல் தமிழ்நாட்டிலும்.. தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் கருத்து!
இதன் தொடர்ச்சியாக பேசியபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி சீமான் கருத்து தெரிவித்தது பற்றிய கேள்விக்கு, "சீமான் கருத்து சர்ச்சைக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிச்சயம் தமிழ்நாடு, திராவிடம் இவை இரண்டையும் பிரிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளில் திராவிடம் என்ற பெயர் தான் உள்ளது.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தான். புதிய கட்சி தொடங்குபவர்களும் திராவிட பெயர் கொண்டு தான் தொடங்குகின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன ஒன்று இதை தி.க மற்றும் தி.மு.க ஆகியவை முன்னிறுத்தி செல்லும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்