கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் நேற்று (பிப்.15) நடைபெற்ற பெண்களுக்கான புதிய தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மனசாட்சி இல்லாதவர்களே ஆளுநரை ஆதரிப்பர். ஆளுநருடைய நடவடிக்கையை மனசாட்சி உள்ள எவரும் ஆதரிக்க மாட்டார்கள்.
ஆளுநரை மாற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், எங்களது வழக்கறிஞர்கள் தகுந்த வாதத்தை முன் வைப்பார்கள். தேர்தல் பத்திரம் ரத்து என்கிற தீர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். வரவேற்க வேண்டிய நல்ல தீர்ப்பு அது. இல்லையென்றால், கருப்பு பணத்தை அங்கே கொண்டு சென்று விடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் புதிய திட்டங்களைக் கொண்டு வரவில்லை என்கிற ஈபிஎஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், "தமிழகம், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உள்ளது. மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்பதை முதலில் அறிவித்தது தமிழக அரசுதான். மேலும், மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தது.
இப்படி இந்தியாவிற்கு முன்னோடி திட்டங்களை அறிவித்திருக்கும் தமிழக அரசை கண்ணை மூடிக்கொண்டு, காதை பொத்திக்கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. கண்ணை, காதை திறந்து கேட்டால் தெரியும், புரியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எங்களோட சேர்ந்து குரல் கொடுங்க" எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்