சென்னை: 2021ஆம் ஆண்டு, அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு ரோந்துப்பணி செல்லும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவருக்கு மேல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கண்டிப்பாக கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவானது தற்போது வரை தொடரப்படும் நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கைத்துப்பாக்கி கொண்டு செல்வது குறித்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவி ஏற்றவுடன் டேவிட்சன் தேவசீர்வாதம் ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐஜிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அதில் ரவுடிகளின் வழக்கை கிடப்பில் போடாமல் தலைமுறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அப்படி மீறி கிடப்பில் போட்டால் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ரவுடிகளுடன் தொடர்பில் இருக்கும் காவல் துறையினரை கண்டெடுத்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் தமிழக முழுவதும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.