கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்றைய தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள கண்காணிக்கும் கேமராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும் கட்சிகள் பார்க்கின்ற திரையில் தொழில்நுட்பக் கோளாறு என்று கூறுகிறார்கள்.
இந்த கோளாறுகள் எல்லாம் வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் பணி. காலச் சூழ்நிலை என்று அவர்கள் கூறினாலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இல்லாத வெயில் ஊட்டியில் இல்லாமல் இல்லை. எனவே, முறையான தொழில்நுட்பத்தைக் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதில் எந்தவித ஐயமும் காட்டாமல் பணிசெய்ய வேண்டும்.
வாக்காளர்களின் பெயர்கள் பல்வேறு இடங்களில் விட்டுப் போய் உள்ளது, குறிப்பாக, பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களின் பெயர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விட்டு போய் உள்ளது. திமுக தோல்வி பயத்தாலேயே எங்கள் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளார்கள். EVM இயந்திரத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அனைவரும் விளக்கியுள்ளார்கள்.
தேர்தல் ஆணையமும், நீதிமன்றத்திலும் அனைத்து இடங்களிலும் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அல்லது இந்தியா கூட்டணி தோல்வி பயத்தில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காக இதனைக் கூறி வருகிறார்கள். அயோத்தி ராமர் கோயில் மூலம் மக்கள் ஒவ்வொருவருடைய எண்ணம், 500 ஆண்டுகால போராட்டத்தால் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியர்கள் ஒவ்வொருவருடைய கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தி அங்கு செல்லவில்லை என்று கூறுவது அவர் ராமரை வெறுக்கிறாரா, இந்து மதத்தை வெறுக்கிறாரா அல்லது கடவுளை வெறுக்கிறாரா என்பதைத் தான் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் காலச் சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு இன்னும் பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.