சென்னை: கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்தார். 17 நாட்கள் பயணம், பெரிய அளவில் முதலீடு வரும் என எதிர்பார்த்த நிலையில் முதலீடு வந்து சேரவில்லை.
அதை மறைப்பதற்காகவே, அமெரிக்காவிலிருந்து புறப்படும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் மற்றும் ஸ்டாலின் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மதுவிலக்கு வேண்டும் என்பது அனைவரினுடைய கோரிக்கையாக இருக்கிறது.
ஆனால், அதை ஒரு அரசியல் நாடகமாக கடந்த நான்கு நாட்களாக முதலீடுகளை கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும், என்ன முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என தெரியாமல் இருக்க வேண்டும், அது குறித்து சர்ச்சை வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு மதுவிலக்கு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
17 நாட்களாக அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களைச் சந்தித்தார், அவர் சந்தித்த பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள். அதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாட்டிலேயே செய்திருக்கலாம், இதற்காக அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயணம் ஒரு தோல்வி அடைந்த பயணம், அதை மறைப்பதற்கு தான் இந்த மதுவிலக்கு நாடகம்" என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: "பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் செயல்படுத்த காரணம் இதுதான்"- சபாநாயகர் அப்பாவு!
அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "ஏற்கனவே ஸ்பெயின் மற்றும் துபாய் சென்றிருந்தது குறித்து சரியான தகவல் இதுவரை கொடுக்கவில்லை. ஆகவே, அதற்கான வெள்ளை அறிக்கைகளை வெளியிட வேண்டும். முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார், அதை நாம் யாரும் எதுவும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால், 17 நாட்கள் முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம் என கூறிச் சென்று என்ன முதலீடு வந்திருக்கிறது? என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? என கேள்வி எழுப்புகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என கூறினார்கள். அதற்கு பதிலாக எண்ணிக்கையை உயர்த்தி உள்ளார்கள். அப்பொழுது திருமாவளவன் கூட்டணியில் தான் இருந்தார். அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் தான் இருந்தார். கிராமம் கிராமமாக மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டு வருகிறது. மதுவிலக்கு மாநாட்டிற்கு ஏன் ஜெகத்ரட்சகனையோ, டி.ஆர்.பாலுவை அனுப்பவில்லை?" என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், மதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், ஸ்டாலினும் திருமாவளவனும் நாடகமாடுகிறார்கள் என எல்.முருகன் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "திருமாவளவன் தற்போது மாநாடு நடத்துகின்றார். ஆனால், இதற்கு முன்பாகவே எங்கள் சொந்த ஊரில் நடந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்றவர். எல்.முருகன் எப்போதும் பூசி முழுகக்கூடியவர்" என்று பதிலளித்தார்.
இதற்கிடையே, புதுக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் குறித்த நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "உண்மையிலேயே திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மது ஒழிப்பு கட்டாயம் என்று கூறிவரும் பாஜகவோடு கூட்டணி வைத்து போராட வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களை நம்புவார்கள். 2026ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து அதிக சீட்டு பெறுவதற்காகவே, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.