வேலூர்: கே.வி. குப்பம் சார்பதிவாளர் முறைகேடான பத்திரப்பதிவுக்கு புரோக்கரிடம் லட்சம் பெற்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், தற்போது சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி. குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணி புரிந்து வந்தவர் கவிதா. இவர் முறைகேடான பத்திரங்களுக்குப் பலரிடம் கையூட்டுப் பெற்று வந்ததாக புகார் எழுந்து வந்த நிலையில், புரோக்கர் ஒருவரிடம் முறைகேடான பத்திரப்பதிவு செய்ய பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அவர் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி பணம் கொடுத்துள்ளார். அப்போது, "சேர்மன் நியூட்ரல் அவரை சரி செய்து விட்டோம். முன்னதாக ரூ.1 லட்சம் கொடுத்துவிட்டோம். இப்போது ரூ.75 ஆயிரம் தருகிறோம். இன்னும் பல இடங்கள் உள்ளது. அதனால், இதை வைத்துக் கொள்ளுங்கள். இனிமேல் வருவதை ஃபாலோ பண்ணிக் கொள்ளுங்கள்" என புரோக்கர் சார்பதிவாளர் கவிதாவிடம் பேசி பணம் கொடுத்தது வீடியோவாக எடுக்கப்பட்டு, இணையதளத்தில் பரப்பப்பட்டு வந்தது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் கவனத்திற்குச் சென்றுள்ளது. பின்னர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சார்பதிவாளர் கவிதா லட்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, கவிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், சார்பதிவாளர் கவிதா புரோக்கரை வீட்டிற்கே அழைத்து லஞ்சம் பெறுவது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்