தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவில்லா சான்றிதழ் வழங்கக் கடந்த 2016ஆம் ஆண்டு 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய துப்புரவு ஆய்வாளர் தாமஸ் என்கிற தாமஸ் பெர்னாட்ஷா என்பவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை சாலியத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், மறைந்த தனது தாயார் கலைச்செல்விக்கு இறப்பு பதிவில்லாச் சான்று கேட்டு, தஞ்சை மாநகராட்சியில் கடந்த 19.05.2016 அன்று விண்ணப்ப மனு செய்து உள்ளார்.
அப்போது, 7வது கோட்ட துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்த தாமஸ் என்கிற தாமஸ் பெர்னாட்ஷா என்பவர் மணிகண்டன் வழங்கிய மனுவை விசாரித்து இறப்பு பதிவில்லா சான்றிதழ் வழங்கிட ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மணிகண்டன், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின் பேரில், கடந்த 30.8.2016 அன்று தாமஸ் பெர்னாட்ஷா லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா இன்று (பிப். 27) தீர்ப்பளித்தார். அதில், தாமஸ் பெர்னாட்ஷாவிற்கு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-இன் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் மற்றும் பிரிவு 13 (1) (d) r/w 13(2)-இன் கீழ் ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்தார். அபராதங்களை கட்டத்தவறும் பட்சத்தில், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் மேற்பார்வையில் அரசு வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் வழக்கை திறம்பட நடத்தவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி நன்கொடை பெற்றது பாஜக.. ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு!