தஞ்சாவூர்: இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று(திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்கள் அமல்படுத்தியதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்ததுடன் கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு முடிவினை ஏற்று, அச்சங்க தலைவர் சா. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்த போராட்டத்தில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறியதாவது, "மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், உரிய விவாதம் எதுவும் நடத்தாமல், மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசிக்காமல், பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா ஆகிய 3 சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
இது ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் சமஸ்கிருதம் மற்றும் இந்தியில் உள்ள இந்த சட்ட திருத்தங்கள் பொது மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எதிரானது என்பதற்காக கடந்த மாதம் முதல் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை கண்டித்தும், இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் போராடி வருகின்றோம்.அதன் ஒரு பகுதியாக இன்று கும்பகோணத்தில் வழக்கறிஞர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது" என்றனர்.
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பகுதியில், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேக்குறாங்க" - வருவாய்த்துறைக்கு எதிராக நெல்லை நபரின் பரபரப்பு வீடியோ!