சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் ஆஜரான கிருஷ்ணசாமி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று (நவ 07) பேரணி நடத்த முடிவு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டதாகவும், அதனால் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் முறையீடு செய்தார்.
மேலும், இந்த பேரணிக்காக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பேர் திரண்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
கிருஷ்ணசாமியின் முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனவும், வழக்கை தாக்கல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரி டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது நேரில் ஆஜராகி இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் வழக்கில் வாதங்களை துவங்க அவகாசம் கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் வாதங்களை துவங்காவிட்டால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து செய்வதுடன் டென்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்