கோயம்புத்தூர்: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, வீட்டில் கிருஷ்ணர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதை முன்னிட்டு தற்போது கிருஷ்ணர் சிலைகள் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
அதன்படி கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் உள்ள தமிழ்நாடு கைவினை பொருள் கழகமான பூம்புகார் சார்பில் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கி உள்ளது. வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, சந்தன மரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், காகிதகூழ் பொம்மைகள், களிமண் பொம்மைகள் உட்பட பல்வேறு வகையிலான கிருஷ்ணர் சிலைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன.
அதுமட்டுமின்றி வைஜெயந்தி மாலைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சிறிய அளவிலான கிருஷ்ணர் சிலைகள் முதல் பெரிய அளவிலான கிருஷ்ணர் சிலைகள் வரை அனைத்தும் கண்கவர் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு 11 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என பூம்புகார் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பேசிய கோயம்புத்தூர் கிளை பூம்புகார் மேலாளர் ஆனந்தன், "ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த விழாக்களின் போது கண்காட்சி நடத்துவோம். அந்த வகையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி வரவுள்ளதால், அதற்காக கண்காட்சி நடத்தி வருகிறோம்.
பித்தளை, பஞ்சலோகம், காகிதக்கூழ், மரம் உள்ளிட்டவற்றிலான கிருஷ்ணர் சிலைகளை விற்பனை செய்து வருகிறோம். இந்த கண்காட்சிக்கு கடந்த ஆண்டு இருந்த வரவேற்பை போலவே இந்த ஆண்டும் மக்களிடம் வரவேற்பு உள்ளது. 100 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: எப்பா சாப்பாடு எதுவும் இருக்கா! வீட்டு கேட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்! - Elephnat Attrocity video