சென்னை: ALVI Digitech Private Limited மற்றும் Giant Films இணைந்து வழங்கும் 'தேனிசைத் தென்றல்' தேவாவின் "கொஞ்ச நாள் பொறு தலைவா" இசைக்கச்சேரி வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல்முறையாக கோயம்புத்தூரில் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றி இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் “தேனிசை தென்றல்” தேவா. கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும்.
இவரது கானா பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத்தென்றல் எனப் பெயரெடுத்தவர். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்தவர் தேவா.
அவரது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தமிழகம் முழுவதிலும் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ் முரளி, அனுராதா ஶ்ரீராம், SPB சரண், உன்னி மேனன்,
மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த “கொஞ்ச நாள் பொறு தலைவா” இசைநிகழ்ச்சி, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ள நிலையில், கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்..