கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் வேலாயுதம்பாளையம் பகுதிக்குட்பட்ட தவுட்டுப்பாளையம் வழியாக காவிரி ஆறு ஓடுகிறது. இதில் குளிக்கக் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவரும், கரூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் (24), மற்றும் விடுமுறைக்காக கொடைக்கானலில் இருந்து கரூர் வந்த அவரது நண்பர்கள் மணிகண்டன்(24), பாலமுருகன்(23) ஆகிய மூவரும் நேற்று ஜுன் 23 ஆம் தேதி மாலைப் பொழுதில் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இதில் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் முதலில் ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான இடத்திற்கு நீச்சலடித்துச் சென்ற நிலையில் இருவரையும் நீர் இழுத்துச் சென்றுள்ளது. இதைப் பார்த்துக் கூச்சலிட்ட கார்த்திக் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் தேடி 2 மணி நேரமாகப் போராடிய நிலையில், இருவரையும் சடலமாக மீட்டனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறையில் கொண்டாட்டமாகக் கரூர் காவிரி ஆற்றில் குளிக்க வந்த இரண்டு கொடைக்கானல் இளைஞர்கள் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் மணல் அதிக அளவில் அள்ளப்பட்டதால் அங்கு உருவாகியிருக்கும் புதைகுழிகள் காரணமாக, ஆற்றில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள் நீரில் மூழ்கிப் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அபாய அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தற்கொலைக்கு முயன்ற கணவர்; அதிர்ச்சியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. சேலத்தில் நடந்தது என்ன?