சென்னை: கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர், சாகுல் ஹமீது சிராஜுதீன்(35). இவர் மீது கடந்த ஆண்டு ஆலப்புழா காவல்நிலையத்தில், பெண்ணிற்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து மோசடி செய்தல், கூட்டு சதி உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து போலீசார் அவரை வலைவீசித் தேடிவந்தனர். ஆனால் போலீஸிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதை அடுத்து சிராஜுதீன், வெளிநாட்டிற்கு தப்பியோட திட்டமிட்டு இருக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதை அடுத்து ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சிராஜுதீனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் 'லுக் அவுட் நோட்டீஸ்' போடப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்தில் ஏற அனுப்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் கேரள மாநில போலீசார் தேடிவரும் சிராஜுதீன், மலேசிய நாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக, பயணம் செய்ய வந்தார்.
அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கணினியில் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், இவர் கேரள மாநிலம் ஆலப்புழா போலீசால் தேடப்பட்டு வரும் தலைமுறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், அவரின் மலேசிய பயணத்தை ரத்து செய்தனர்.
அதோடு அவரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்துவைத்தனர். இதனையடுத்து கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட தனிப்படை போலீசார், தலைமறைவு குற்றவாளியை, கேரளாவுக்கு அழைத்துச் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்... அலெக்சா மூலம் தங்கையின் உயிரை காப்பற்றிய சிறுமி!