கரூர்: கரூர்-சேலம் பைபாஸில் அமைந்துள்ள அம்மா சாலை அருகே, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், வழக்கம்போல நேற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு இளைஞர்களை சோதனை செய்த அவர், அவர்களிடம் இருந்து வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இருவரும் கரூர் வெங்கமேடு திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த சூர்யா (24) எனவும், நரிக்கட்டியூர் டி.என்.இபி காலனி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் (23) எனவும் தெரிய வந்துள்ளது.
வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவை வைத்திருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டதில், வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் பெற்று, கல்லூரி மாணவர்களை குறி வைக்கும் விதமாக போதை ஊசியாக பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி கொடுத்து உதவிய, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சிவா தியேட்டர் தெருவைச் சேர்ந்த இலியாஸ் (25), பரமத்தி வேலூர் நடந்தை நாடார் தெருவைச் சேர்ந்த பிரபு (21), ஈரோடு மாவட்டம் சூலை அருள் வேலன் நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த விஷால் கார்த்திக் (27), கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (23) ஆகிய 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், நேற்று கரூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவர்களை குறிவைத்து, வலி நிவாரண மாத்திரைகளை போதை பொருளாக விற்பனை செய்து வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர்களை கைது செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது போன்று செய்வதால் மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தல் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிப்பு!