சென்னை: சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “ திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான கருத்துக்களை தொடர்ந்து வைத்து வருகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் இல்லை. சிஏஏக்கு எதிராக அனைத்து இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியதில் நிறைய சந்தேகங்கள் உள்ளது. எதன் பிறகு அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்று பல்வேறு கேள்விகள் உள்ளன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற சோதனைகளின் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது பல்வேறு தரப்பினர் சொல்லும் கருத்தாக உள்ளது” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 11, 2024 அன்று அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT - CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரம்: 'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் தரவுகளை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 12ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. இந்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 14ஆம் தேதி அதன் இணைய தளத்தில் வெளியிட்டது.
இந்த தகவல் இரண்டு பகுதிகளாக வெளியாகியது. 336 பக்கங்கள் கொண்ட முதல் பகுதியில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர்களும், தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன. 426 பக்கங்கங்கள் கொண்ட இரண்டாவது பகுதியில், அரசியல் கட்சிகளின் பெயர்களும், அவை எப்போது, எவ்வளவு தேர்தல் பத்திரங்களை பணமாக்கின என்பது பற்றிய விரிவான தகவல்கள் குறிப்பிடப்பட்டது.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனமான ‘ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்கியுள்ளது. மேலும், இதில் பல்வேறு நிறுவனங்கள் நன்கொடையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தகக்கது.
தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றன.
இதையும் படிங்க: "விழுப்புரத்தில் மீண்டும் நான்தான் போட்டியிடுகிறேன்" - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உறுதி