சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “விசாரணை நேர்மையான முறையில் விரைவாக நடைபெற்று வருகிறது. ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தியதால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்தும்
நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தற்போதைய அரசு உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தச் சம்பவத்திற்கு காரணமான 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 11 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது என விசாரணை செய்யப்பட்டு வருகிறது. உயிரிழப்புக்கான தடவியல் துறை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றுவதால் வழக்கில் தேவையற்ற தாமதம் ஏற்படும். அரசுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம். இந்த வழக்கில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. நேர்மையான விசாரணை நடைபெறும் போது மாற்று விசாரணை அவசியம் இல்லை” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி எம்எல்ஏ புகார் அளித்த போது, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் ஏன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை, சட்டமன்றத்தில் புகார் எழுப்பப்பட்ட உடன் காவல்துறை விசாரணை செய்ய அறிவுறுத்தியிருக்கலாம்.
விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என்றால் விசாரணையை கைவிட்டிருக்கலாம், இந்தச் சம்பவமும் நடைபெற்றிருக்காது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அரசுத் தரப்பில் வாதத்தை முன்வைக்க, வழக்கு விசாரணை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது”.. பாஜக உள்ளிட்ட மனுதாரர் தரப்பு வாதம்! -