ஈரோடு: “அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் தற்போது உட்கட்சி பூசல் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக முள்ளாள் அமைச்சர் செங்கோட்டையன் மோதத் தொடங்கியுள்ளார்.
இந்த நேரத்தில், பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தயார்” என்று கூறியதாக தனியார் செய்தி நாளிதழில் செய்தி வெளியாகியது. இதற்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக இயக்கத்தை 1972-ல் எம்.ஜி.ஆர் துவங்கினார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்று வரை 45 ஆண்டு காலம் என்னுடைய நேர்வழிப் பயணங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறு குற்றம் கூட சொல்ல முடியாத அளவிற்கு என்னுடைய அரசியல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, பத்திரிகையில் வந்திருக்கக் கூடிய செய்தியைக் காணும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று தவறான செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவதற்கு முன்னால் கருத்துகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் செய்திகளை வெளியிட்டுள்ளது பத்திரிகை தர்மமாக இல்லை. ஆகவே, இது போன்ற உணமைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது கண்டணத்திற்குரிய ஒன்று.
எனவே, எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அதிமுகவில் உள்ள கோடான கோடி தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்திற்கு நான் தூணாக நின்று பணியாற்றி வருகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் களமிறங்கும் ராகுல்.. அமேதியை கைவிட காரணம் என்ன? - Lok Sabha Election 2024