மயிலாடுதுறை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் விறுவிறுப்பாகி உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, நேற்று (திங்கட்கிழமை) மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ‘கை சின்னத்தில் ’ வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வியூகத்தால், இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதன் காரணத்தால், இன்று பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வருகை புரிகிறார். தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பிரதமர் மோடியின் ஆட்சி வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அவர்களுக்கான நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால்தான், அவர்கள் கோபத்துடனும், வெறுப்பு அரசியலையும் பேசி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியின் நோக்கம் நல்லாட்சியை தருவதாகும். பிரதமர் மோடி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று கூறுபவர்களின், உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தல் வித்தியாசமானது. வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளிடையே போட்டி என்பதை விட, இரண்டு கொள்கைகளுக்கு இடையேயான தேர்தல்.
ஜனநாயகமா? எதேச்சதிகாரம்? இது போன்று தேர்தல் நடக்க வேண்டுமா? இதுவே கடைசி தேர்தலாக இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக்கூடிய அணி இது. எனவே, மக்கள் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவிற்கு வாக்களிக்க வேண்டும் ”என்று கூறினார்.
இதையும் படிங்க: தர்பூசணி முதல் மாட்டு வண்டி வரை.. நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள்! - Lok Election Campaign 2024