சென்னை: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணாக்கு, சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பினர் 2024ஆம் ஆண்டிற்கான 'சங்கீத கலாநிதி' விருதினை அவருக்கு அளிப்பது என்று முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.
'சங்கீத கலாநிதி' விருது டி.எம்.கிருஷ்ணா-க்கு அளிக்கப்படவிருக்கிறது என்பதை அறிந்தவுடன், கடந்த 20ஆம் தேதியன்று, அதே இசைத் துறையில் உள்ள ரஞ்சனி, காயத்ரி ஆகியோர், டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க விருப்பமில்லாததால், தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதனை, மியூசிக் அகாடமியின் தலைவருக்குத் தெரிவித்ததுடன், சமூக வலைத்தளங்களில் இது குறித்து அவதூறு பரப்பியுள்ளனர்.
ஏன் அந்த சங்கீத மாநாட்டினைப் புறக்கணிக்கிறோம் என்று காரணம் கூறுகையில், பெரியார் என்று பலராலும் அறியப்பட்ட ஈவெராவை, பாடகர் டி.எம்.கிருஷ்ணா பெருமைப்படுத்தி வரும் அபாயகரமான நடத்தையுள்ளவர் என்று எழுதியுள்ளனர். அவர்கள் தந்தை பெரியாரைத் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள காரணம், உண்மைக்கு மாறானதும், அறியாமையின் பாற்பட்டதும், சமூக - சாதி வெறுப்புணர்ச்சியினால் தூண்டப்பட்டதுமாகும்.
அவர்கள் அந்த கடிதத்தில், பெரியார் குறித்து மூன்று அவதூறுகளை எழுதி அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்வது, பாடுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அதற்கான காரணங்கள் சற்றும் பொருத்தமின்றி பெரியார் பற்றி உண்மைக்கு மாறான அவதூறுகளைக் கூறி, கடிதம் சென்னை மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவரான முரளிக்கு கிடைக்கும் முன்பாக அவரது ஒப்புதல் இன்றி, சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது பலராலும் பேசுபொருளாகி பல லட்சக்கணக்கான பெரியார் தொண்டர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து இவர்கள் கூறியுள்ள அவதூறுகள் ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் பரப்பப்பட்ட அவதூறுகள் என்ற நிலையில், தற்போது கோவை தொகுதியில் மக்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளரான தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை, அவரது எக்ஸ் பக்கத்தில் இவர்களை ஆதரித்து, மியூசிக் அகாடமியின் விருது முடிவுக்கு எதிராக பேசுவோர் பக்கம் நிற்கிறார்.
எங்கெங்கெல்லாம் நுழைந்து அதனை தங்களது வயப்படுத்தி, மற்றவர்களை அவதூறுக்கு ஆளாக்க முடியுமோ, அதனை செய்யவே இப்படி சிலரை கருவியாகப் பயன்படுத்துகிறார்களோ என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. தனிப்பட்ட இருவரது கடிதப் போக்குவரத்துக்கு விளம்பரம் தேடுவது மூலம், யார் அவ்வமைப்பை உடைக்கவோ, சிதைக்கவோ முயலல்கிறார்கள் என்பது தெளிவாக எவருக்கும் விளங்கும். இந்த அவதூறுகளுக்கு ஆர்எஸ்எஸ், பாஜகவின் பின்னணியே மூலபலம் என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாததாகும்” என தெரிவித்துள்ளார்.