கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முன்னிட்டு கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 59 வேட்பு மனுக்களில் 41 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனுவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதனிடையே அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், அண்ணாமலை நீதிமன்றங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாகவும், வேட்பாளரின் குற்றப் பின்னணி வரிசைப்படுத்தவில்லை எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அண்ணாமலையின் வேட்புமனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நேற்றிரவு (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேசினார். அப்போது, அவரது வேட்பு மனு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - முழு விவரம்!
அதற்கு, "அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியததால் வழக்கமான நாடகத்தை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள். எமது தரப்பில் இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம். சீரியல் நம்பர் 15, 27 ஆகிய வற்றில் ஒரு மனு India Court fee பத்திரத்திலும் மற்றொன்று Indian non judicial பத்திரத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரண்டு மனுக்களையும் ஆராய்ந்து ஒரு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல், வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டு வருகிறார்கள்" என விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் கூறுவது மனுவை நிராகரிக்க வேண்டிய காரணமும் இது இல்லை. மேலும் வேட்பு மனு நிராகரிக்கப் பட வேண்டும் என்றால் வேண்டுமென்றே ஒரு பொய்யான செய்தியை குறிப்பிடுதல் போன்று ஏதாவது கூறி இருக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் தெரிய வேண்டுமென்றால், தேர்தல் அதிகாரிகளிடம் கேட்கலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்!