சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்#MadrasHighCourt #ChiefJustice #ETVBharatTamil pic.twitter.com/1hhSiSgm2N
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 16, 2024
பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த 2023 மே 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கபூர்வாலா, 2024ஆம் ஆண்டு மே 23-ம் தேதி ஓய்வு பெற்றார். தொடர்ந்து நீதிபதி மகாதேவன் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், பரிந்துரையை ஏற்ற அமைச்சகம், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
பின்னர், அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர், மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே, உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமாரை நியமிக்கவும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.