சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி, தங்கள் கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜகவின் மாநிலப் பிரிவு தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சந்திப்பதற்காகவும், சென்னையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் இன்று (பிப்.11) சென்னை வருகிறார்.
அதன்படி, இன்று சென்னை வரும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் கலந்து கொள்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம், கடந்த 2023ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியின் மீது குற்றச் சாட்டுகளை முன்வைத்தும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலையின் இந்த நடைபயணம் மூலம் தமிழகத்தில் பாஜக-விற்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்ற சமீபத்திய கருத்து கணிப்பைத் தொடர்ந்து, தற்போது பாஜகவினர் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
அந்த வகையில், 199 சட்டப்பேரவைகளிலும் நடைபயணத்தை முடித்து, தற்போது 200-வது சட்டமன்றத் தொகுதியாக துறைமுகம் தொகுதியில் இன்று நடைபயணம் மேற்கொள்கிறார், அண்ணாமலை. இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் ஜெ.பி.நட்டா, மாலை 6.30 மணியளவில் 'என் மண் என் மக்கள்' நடைபயண நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, அங்கு மிண்ட் தெருவில் 7 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இவரின் இந்த குறுகிய பயணத்தில், அதிமுக-வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, பாமக மற்றும் தேமுதிக தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான கட்சி ஏற்பாடுகளை நட்டா மேற்பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் கடந்த 5 ஆண்டுகளில் நாடு கண்டது" - மக்களவையில் பிரதமர் மோடி!