திருப்பூர்: பிரபல தனியார் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் காமநாயக்கன்பாளையம் அடுத்த கிருஷ்ணாபுரம் தோட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தான் கொடுத்த செய்தியால் அதிருப்தி அடைந்த நபர்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும், அவ்வப்போது தன்னை நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் இரண்டு நாட்களாக பின் தொடர்ந்து வருவதாகவும், தனது அக்கம்பக்கம் வீட்டில் குடியிருக்கும் அனைவரிடமும் தன்னை பற்றி விசாரித்ததாகவும், தன் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி நேசபிரபு அவசர உதவி எண் 100க்கு அழைத்துப் பேசி உள்ளார். மேலும், தன்னை பின் தொடர்பவர்கள் குறித்து அவ்வப்போது அவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததாகவும் நேசபிரபு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜன.24) இரவு சுமார் 10 மணி அளவில், நேசபிரபுவின் வீட்டின் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை நோட்டமிடுவதைக் கண்டுள்ளார். அதனை அடுத்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் உள்ள மேலாளர் அறையில் நேசபிரபு பதுங்கிக் கொண்டு காவல் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது, திடீரென பெட்ரோல் பங்க் மேலாளர் அறையின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த மர்ம கும்பல், நேசபிரபுவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தாக்கி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலால் இரண்டு கை மற்றும் கால்களில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை சிலர் பின் தொடர்வதாகவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் செய்தியாளர் ஒருவர் பலமுறை தெரிவித்தும், கடைசிவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாகச் செயல்பட்ட காவல்துறைக்குச் செய்தியாளர்கள் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பல மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்களும் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளர் தாக்கப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து, பத்திரிகையாளர் காவல்துறை அதிகாரியிடம் கதறிய ஆடியோவுடனான பதிவை தனது X சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.
பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!