ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை எண் 1ஏ-இல் நடை மேம்பாலத்தின் மேலே நின்றிருந்த ஜார்கண்ட் மாநிலம் பர்மசியா மாவட்டத்தைச் சேர்ந்த குணால் பாஸ்கி (33) என்பவர், திடீரென நடை மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அவர் ரயில்வே உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்ததால், அவரது உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு, தண்டவாளத்தின் நடுவில் விழுந்துள்ளார்.
இது குறித்து அங்கிருந்த பயணிகள் ரயில்வே காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்த குணால் பாஸ்கியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், குணால் பாஸ்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ரயில்வே காவல்துறையினர், குணால் பாஸ்கி எதற்காக அரக்கோணம் வந்தார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இரண்டு துண்டுகளான புதிய வீடு.. பொதுப்பணித்துறையின் கவனக்குறைவு தான் காரணமா?