சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 12 ஆம் தேதியிலிருந்து ஜப்பான் பொம்மை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பானில் உருவாக்கப்படும் பல்வேறு விதமான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் அறக்கட்டளை (Consulate General of japan, Japan Foundation , ABK-AOTS DOSOKAI japanese school and government of Tamil Nadu) சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானியர்கள் பொதுவாக பொம்மைகளை விரும்பி வாங்குவதும், பிறருக்கு பரிசாக வழங்குவதும் வழக்கமாகும். இந்த கண்காட்சியில் கலைஞர்கள், புத்த துறவியர், போர் வீரர்கள், சாகச நாயகர்கள் ஆகியோர் பொம்மை வடிவில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பொம்மைக்கு அருகிலும் அந்த பொம்மையின் பின்னணி குறித்த குறிப்பு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கட்டணம் இல்லை. இந்த பொம்மை கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
ஓரிகாமி பயிற்சி பட்டறை: கண்காட்சியில் ஜப்பானின் பாரம்பரிய கலையான ஓரிகாமி (Origami) - காகிதத்தில் பொம்மை செய்வது குறித்த பயிற்சி பட்டறை செப்டம்பர் 12 மற்றும் இன்று (செப்.21) நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஓரிகாமி கலையை கற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், இந்த கண்காட்சி குறித்தும் ஓரிகாமி பயிற்சி பட்டறை குறித்தும் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்போது பேசிய ஜப்பானிய மொழி ஆசிரியர் கீதா, "கண்காட்சியில் அதிகளவில் ஜப்பானிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் ஏரளாமானோர் வந்து பார்த்து செல்கின்றனர். ஜப்பானிய கலாசாரம் குறித்தும் ஜப்பானிய கலாசாரம் எவ்வாறு இந்திய கலாசாரத்தோடு ஒருமித்து இருக்கிறது என்று இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளிப்கார்ட்டில் ஆஃபர் மழை: 5ஜி மொபைல் போன் எங்கக்கிட்ட தான் கம்மி; அமேசானுக்கு கடும் நெருக்கடி!
தமிழ் கலாசாரம் vs ஜப்பான் கலாசாரம்: தமிழ் கலாசாரத்தில் கொலு பண்டிகை முறை உள்ளது. அதே போல ஜப்பானிலும் பொம்மைகள் அடுக்கடுக்காக வைக்கின்றனர். இந்த பொம்மைகள் காகிதத்தால் செய்யக்கூடிய பொம்மைகளாகும். ஓரிகாமி பயிற்சி பட்டறைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கமானது ஜப்பானின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது. தமிழ் கலாசாரமும், ஜப்பானின் கலாசாரமும் கிட்ட தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. அதை குறித்து இந்த கண்காட்சியில் விரிவாக கூறப்பட்டுள்ளது. 'ஓரி' என்றால் மடக்குதல் என்றும் 'காமி' என்றால் காகிதம் என்று அர்த்தம். இந்த கலை குழந்தைகளுக்கு தேவையற்றதை சிந்திக்க விடாமல் கவனம் செலுத்துகிறது.
தர்மா டால் பொம்மை: ஜப்பானில் மிகவும் பிரபலமான பொம்மை "தர்மா டால்" (Daruma doll) என்ற சொல்ல கூடிய புத்தர். இந்த பொம்மையின் கண்களில் எதுவும் இல்லாமல் வெள்ளையாக இருக்கும். நாம் எதாவது வேண்டிக்கொண்டு அந்த பொம்மையின் ஒரு கண்ணில் மட்டும் கண்ணை வரைந்து விட வேண்டும். பின்னர் நாம் வேண்டிக்கொண்டது நடந்துவிட்டால் மற்றொரு கண்ணிலும் கண்ணை வரைந்து விட்டு அதனை ஒரு கண்ணாடி பெட்டியில் அடைத்து வைத்து விடுவர். இது ஜப்பானில் பின்பற்ற கூடிய ஒரு நம்பிக்கையாகும். இந்த பொம்மையின் மற்றொரு சிறப்பு இதன் அமைப்பு பின்புறம் வளைந்து இருப்பதால் கீழே விழுந்தாலும் மீண்டும் நேராக நின்றுவிடும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஜப்பானிய மொழி ஆசிரியர் உஷா பேசியதாவது, "நான் எனக்கு இருந்த ஆர்வத்தில் ஓரிகாமி கலையை கற்றுக்கொண்டேன். இந்த கலையை குழந்தைகள் கற்றுக்கொள்வதால் கண், மூளை, தலை, கழுத்து, விரல்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படும். ஓரிகாமியை குழந்தைகள் குழுவாக கற்றுக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கும் அடிப்படை திறன் உயரும்" என்று கூறினார்.