சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் வந்த நிலையில், அவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கு உள்ளதாகவும், ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிட்டதால், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி எழில் வேலன் ஒத்தி வைத்தார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது, மேலும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகக் கடந்த ஜூன் 26-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், விசாரணைக்காக டிசம்பர் 20-ஆம் தேதி ஜாபர் சாதிக் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (டிசம்பர் 10) செவ்வாய்க்கிழமை நீதிபதி எழில் வேலன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாபர் சாதிக் உள்பட இரண்டு பேர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், ஜான் சத்தியன் ஆகியோர், 160 நாட்களுக்கு மேலாக மனுதாரர்கள் இருவரும் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டது.
ரியல் எஸ்டேட் மற்றும் பிரியாணி கடை உள்பட பல கடைகளை நடத்தி தான் மனுதாரர்களுக்கு வருமானம் வந்துள்ளது. இதற்கு வருமான வரி, ஜிஎஸ்டி ஆகியவை செலுத்தியுள்ளனர். அனைத்து வருமானங்களுக்கும் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடக்கவில்லை.
இதையும் படிங்க: திருமணம் மீறிய உறவு: கணவரை கொன்ற வழக்கு; மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
மனுதாரர்களுக்கு பணம் எப்படி வந்தது என்று அமலாக்கத்துறை சட்டப்படி, அமலாக்கத்துறையினர் தான் நிரூபிக்க வேண்டும். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டை அமலாக்கத்துறை தான் நிரூபிக்க வேண்டும். புலன் விசாரணை முடிந்துவிட்டதால் ஜாமீன் தர வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வழக்கறிஞர் என்.ரமேஸ், மனுதாரர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு உள்ளது. இவர் வருமான கணக்கை பார்க்கும்போது சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது எனத் தெரிகிறது. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.