கோவை: கடந்த 2019ஆம் ஆண்டு திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த அப்துல் காசிம், உஸ்மான் ஃபாரூக், முபாரக், அப்துல்ரகுமான், தமீம் அன்சாரி, கண்ணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.5 கோடி மதிப்புடைய இந்த செம்மரகட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். தலைமறைவானவர்களில் முபாரக் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகின்றார்.
செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நிலையில் நீதிமன்றம் 6 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் கோவை பெரியகடை வீதியில் இருந்த முபாரக்கை கோவை மாநகர போலீசார் நேற்று (பிப்.27) கைது செய்தனர். இதையடுத்து அவர் சுங்கத்துறை அதாகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சுங்கதுறை அதிகாரிகள் முபாரக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கொலைவெறி தாக்குதல்: 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்த சென்னை அமர்வு நீதிமன்றம்