சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே அதிக அளவில் மழை பெய்து ஏரி, குளம் நிரம்பி ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் இதனால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பெறும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சென்னையை பொறுத்தவரையில், கடந்த காலங்களில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரும் சேர்த்து திறக்கப்பட்டதால் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது.
மேலும், 200 அடிக்கு மேல் இருந்த அடையாறு ஆறு ஆக்கிரமிப்புகளால் 100 அடியாக சுருங்கியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆண்டுதொரும் வடக்கிழங்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆகாய தாமரை மற்றும் செடி கொடிகளை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில், அடையாறு ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெறும் ஆகாய தாமரை அகற்றும் பணிகளை மட்டும் மேற்கொண்டுள்ளதாகவும் மற்ற பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
அடையாறு சீரமைப்பு: "காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கி மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம், வழியாக சென்னை கோட்டூர்புரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கிறது 42 கி.மீ நீளம் கொண்டதாக இந்த அடையாறு ஆறு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரைகள் பலப்படுத்துதல்: இந்தாண்டு அடையாறு ஆற்றில் ஆதனூர் முதல் விமான நிலைய பின்புறம் வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு தற்போது ஆகாயத்தாமரை செடி கொடிகள் அகற்றும் பணிகள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. அதேபோல் விமான நிலைய பின்புறத்தில் இருந்து சென்னை கோட்டூர்புரம் அருகே வரை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆகாயத்தாமரை செடி கொடி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் 90% முடிவடைந்துள்ளன.
சென்ற ஆண்டு அடையாறு ஆற்றில் இருபுறமும் கரைகள் பலவீனமாக உள்ள இடத்தில் தாங்கு சுவர் அமைத்தல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதற்கு கட்டன்கவர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் ஆகாயத்தாமரை செடி கொடிகள் அகற்றும் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. கரைகள் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்தார்.
இது குறித்து அடையாறு ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜோசப் கூறுகையில்,
காருக்கு மாற்று படகு: "எங்கள் பகுதியை பொருத்தவரை வருடம், வருடம் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் வெள்ள பாதிப்புகள் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் உள்ள பகுதிகளே அதிக அளவில் அடையாறு ஆற்று வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இன்னும் சொல்லப்போனால், எங்கள் பகுதியில் இருசக்கர வாகனம், கார் வாங்குவதைவிட படகு தான் வாங்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
வாடகை வீடுதான் பாதுகாப்பு: அதேபோல் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சொந்த வீடு வைத்துள்ள மக்கள் பாதிப்பில்லாத பகுதிகளுக்கு சென்று வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். வாடகை வீட்டிற்கு மாதம் ரூ.30 ஆயிரம் என்றாலும் பரவாயில்லை, நாங்கள் மழை பாதிப்பு ஏற்படும் போது எங்கள் வீட்டில் இருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் மழை நீரில் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறுகின்றனர்.
ஆகாய தாமரை: இன்னும் ஒரு வார காலத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. ஆனால், இன்னும் அடையாறு ஆற்றின் பல பகுதிகளில் செடி, கொடிகள் மற்றும் ஆகாய தாமரைகள் கூட நீக்கப்படாமல் உள்ளது. இன்னும் சில இடங்களில், ஆகாய தாமரை அகற்றும் பணிகளை மட்டும் மேற்கொண்டு மற்ற பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியுமா?: ஒவ்வொரு ஆண்டும் அடையாறு ஆற்றில் பெரும் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெறும் செடி, கொடி மற்றும் ஆகாய தாமரைகளை மட்டும் அகற்றினால் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆகவே, உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல ஏதுவாக ஆற்றை சீரமைத்தும், மக்களுக்கு ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குற்றச்சாட்டை முன்வைத்து கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் டில்லி பாபு, "சென்னை புறநகர் பகுதியில் அடையாறு ஆற்றை சுற்றி சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு அடையாறு ஆற்றை சுற்றி அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருப்பதால் ஆற்றின் கரை மிகவும் குறுகியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடையாறு ஆற்றை சுற்றி உள்ள ஏரிகளில் இருந்து தண்ணீர் நிரம்பி அடையாறு ஆற்றில் கலக்கும் பொழுது அதிகப்படியான வெள்ள நீர் செல்வதால் கரைகள் உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்து கொள்கிறது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் அடையாறு ஆற்றில் பெருவெள்ளம் செல்லும் பொழுது இரண்டு புறமும் உள்ள கறைகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து விடுகின்றன. இதனால் ராயப்பா நகர், பிடிசி கோட்ரஸ், அஞ்சுகம் நகர், அமுதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் தலை முதல் இரண்டாம் தளம் வரை வெள்ள நீரால் மூழ்கி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வருடந்தோறும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்ற ஆண்டு அடையாள ஆற்றில் பெருவெள்ளம் சென்றது இந்த நிலையில் ஆங்காங்கே ஆற்றின் கரைகள் பலவீனமாக உள்ளது. அந்த இடத்தில் தற்போது அதிகாரிகள் வெறும் மணல் மூட்டைகளைக் கொண்டும், வெறும் மணலை கொட்டியும் சரி செய்துள்ளனர். தற்போது அதிக அளவில் இயல்பை விட பருவ மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அதிக அளவில் மழை பெய்தால் வரும் மணல் கொட்டி சரி செய்யப்பட்டுள்ள கறைகள் மீண்டும் உடைந்து குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றில் பலவீனமாக உள்ள கறைகளில் கான்கிரீட் போடப்பட்டால் மட்டுமே ஓரளவுக்கு கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் இன்னும் ஒரு வார காலத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிடும் அதற்குள் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆற்றில் பலவீனமான கரைகள் உள்ள இடங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என இவ்வாறு தெரிவித்தார்.