திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தனியார் மகளிர் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சந்திராயன் 3 திட்ட இயக்குனரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான முனைவர் பி.வீரமுத்துவேல் கலந்து கொண்டு 15 மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களையும், திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் 100 இடங்களை பெற்ற இளங்கலை மாணவிகள் 753 பேருக்கும், முதுகலையில் 250 பேர் என மொத்தம் 1,003 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும், பல்கலைக்கழக தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற துறைகளுக்கு சுழல் கேடயம் வழங்கி
வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் வின்னில் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் சந்திராயன் 2, கடந்த 2019ம் ஆண்டு அனுப்பப்பட்டு அது தரையிறங்க முடியாமல் போனது. தற்போது கடந்த 2023ம் ஆண்டு முதல் முறையாக சந்திராயன் 3 நிலவில் தரையிறக்கப்பட்டது.
இதையும் படிங்க : "கட்சிகளை உடைத்து.. புதிய கூட்டணிகளை உருவாக்கி... மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி குறித்து திமுக கருத்து!
நீங்கள் ஒவ்வொருவரும் சந்திராயனை பற்றி அறிய வேண்டும். பூமியில் இருந்து 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சந்திரன். அங்கு எந்த வசதியும் கிடையாது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளிர் அதிகமாகவும் இருக்கும். அத்தகைய நிலைகள் ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும்.
மாணவர்கள் தாங்கள் ஒரு முறை தோல்வி அடைந்தால் அதிர்ச்சி அடைந்து விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டத்தை நம்பி யாரும் இருக்கக்கூடாது.
கடினமான உழைப்பால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்