சென்னை: தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவித்து, நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து, நாட்டில் பல்வேறு பகுதிகளில், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் வகையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை பணிக்காக ஆயத்த நிலையில் உள்ளனர். முன்னதாக தேர்தல் தேதி அறிவிப்பின்போது, வருமான வரித்துறை, சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் தேர்தல் விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பர் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் சுறுசுறுப்படைந்தது. அதோடு, சென்னை விமான நிலைய வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்கள் வந்துள்ளனர்.
அதனை அடுத்து, வழக்கமாக சென்னை விமான நிலைய வருமான வரித்துறை அலுவலகத்தில் இரண்டு அல்லது மூன்று அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பர். இந்நிலையில், தற்போது 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தொடர்ச்சியாக சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள், தனி விமானங்கள் இயங்கக்கூடிய பழைய விமான நிலையம் ஆகிய பகுதிகளில் மற்றும் விமான நிலைய கார்கோ (சரக்கு) பகுதி ஆகியவற்றில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய வளாகத்திற்குள் அவ்வப்போது திடீர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோரும் சோதனை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு சென்னை விமான நிலையத்தில் தனி அலுவலகங்கள் இல்லாத போதிலும், அவ்வப்போது வந்து திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, சென்னை பழைய விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சரக்ககங்களில் கையாளப்படும் பார்சல்களில் பணங்கள் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்ற கோணத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தனி விமானங்களில் பயணிக்கும் முக்கிய பிரமுகர்களையும் தீவிரமாக கண்காணித்து, அவர்களுடைய உடமைகளை பரிசோதனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது தவிர தேர்தல் சிறப்பு பறக்கும் படையினரும், சென்னை விமான நிலைய வளாகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்; ரூ.3.50 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்..!