சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் மிகக் கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மற்றும் மாஹேவில் வரும் 23 மற்றும் 24ஆம் தேதி மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது.
இன்று (மே 21): கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை, காரைக்கால், அரியலூர், திருச்சி, கரூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை (மே 22): தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (மே 23): தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலத்தின் சில பகுதிகள், கிழக்கு ராஜஸ்தான், வடமேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றிலிருந்து வரும் 24ஆம் தேதி வரை மிகக் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி! - Madurai Rain Update