சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெற்ற புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அங்கு உணவு வகைகள் வீணாக்கப்பட்டது என்று பத்திரிகைகள் ஊடகங்கள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் உணவு வகைகள் வீணாக்கப்பட்டது குறித்து ஊடகங்கள் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரவில்லை. மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்காட்டுவது ஊடகங்களின் பணி. அதைக் காட்டாமல் விட்டது உங்கள் தொலைக்காட்சிகளுக்குத் தான், அதன் நிறுவனங்களுக்குத் தான் இழப்பு.
திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை அந்த மாநாடு எடுத்துக்காட்டியுள்ளது. ஆங்காங்கே அமர்ந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது. ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அந்த அஞ்சல் அட்டைகள் குவியல் குவியலாக மாநாட்டுப் பகுதியில் வீசப்பட்டு உள்ளன. அந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
நீட் தேர்வு ரத்து என்பது திமுக நடத்தும் நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் அளித்திருந்தனர். அதில் சிலவற்றை மற்றும் நிறைவேற்றினர். ஆனால் 100% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதலமைச்சரும், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் பச்சை பொய் சொல்கிறார்கள்.
26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய அளவில் 'இந்தியா' (INDIA) என்ற கூட்டணியை அமைத்துள்ளனர். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. அந்த கூட்டணி அமையும் போதே நான் கூறினேன் இது நிலைக்காது என்று. அது தற்போது தெளிவாகத் தெரிகிறது.
மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜி அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல, அரவிந்த் கெஜ்ரிவாலும் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆகவே அந்த கூட்டணி நிலைக்காது என்பது உறுதியாகி உள்ளது" எனத் தெரிவித்தார்.