திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. சமீபத்தில் இங்குத் தற்காலிக புதிய பேருந்து நிலையம் செயல்பட்ட நிலையில் தற்போது அந்த இடம் செயல்பாடு இல்லாமல் வெறும் காலி இடமாகக் காட்சியளித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காலில் மாவுக்கட்டு போட்ட படியும், சிறுநீர் குழாயுடனும் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது குறித்து பெருமாள்புரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரற்ற நிலையில் ஆம்னி பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட முதியவர் யார் என்பது குறித்து முழுமையான தகவல் உடனடியாக போலீசருக்கு கிடைக்கவில்லை.
முதல் கட்ட தகவலில், அந்த முதியவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரது உறவினர்கள் அவசரகதியில் அழைத்து வந்து ரோட்டில் விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என்றும், சிகிச்சையில் இருந்து பாதியில் வந்ததால் உடல்நலம் குன்றி முதியவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நலம் சரியில்லாத நிலையில் கேட்பாரற்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "விஜயகாந்த் இறந்ததற்கு வடிவேலு வீட்டில் இருந்து அழுதிருக்கலாம்" - நடிகர் சரத்குமார்