கோயம்புத்தூர்: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாநகரம் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநில என்ஐஏ அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சென்னையிலிருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் கோயம்புத்தூர் போலீசார் துணையுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயின் சாதிக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர். இதில் நயின் சாதிக் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ள நிலையில், ஜாபர் இக்பால் இரண்டாவது ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை இவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்குச் சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் போலீசார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி சோதனைக்கு பின்னர் கிளம்பினர்.
மேலும், அவர்கள் பயிற்சி மருத்துவராக இருந்து வரும் தனியார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவர்கள் எப்போது பயிற்சி மருத்துவர்களாக சேர்ந்தார்கள்?, அவர்களின் குடும்ப பின்னணி என்ன? என்பன குறித்தும் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கு: ஒருநாள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி - Felix Gerald