வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை 2024-25 தொடக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாவினை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்க, துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்து பேசினர். மாணவர் நல உதவி இயக்குநர் ஷர்மிளா வரவேற்றார்.
பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் பேசியதாவது, "வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கும் போது மாணவர் பேரவை நிர்வாகிகள் குறைந்த அளவில் இருந்தனர். இப்பொழுது அதிக அளவில் மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாணவர் பேரவை வளர்ச்சி அடைந்து வருகிறது. மாணவர் பேரவை நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்திற்கு பல்கலைக்கழக பாலமாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். உலகத்தில் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. 84 நாடுகளில் முன்னாள் மாணவர்கள் உள்ளனர். நான் வெளிநாடுகள் எங்கு சென்றாலும் முன்னாள் மாணவர்களை சந்திப்பது உண்டு. குறிப்பாக அமெரிக்க மாணவர்களை அடிக்கடி சந்திப்பேன். நமக்கு வாய்ப்பு கிடைத்தால் உலகத்தில் எங்கே சென்றும் பணி செய்ய வேண்டும்.
சில மாணவர்கள் வாங்கும் முதல் மாத சம்பளம் இங்கு உள்ள பேராசிரியர் மற்றும் அவர்கள் தந்தை சம்பாதித்ததை விட அதிகமாக உள்ளது. கல்லூரியில் படிக்கும் நான்கு ஆண்டுகள் உங்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். 72 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இருக்கின்றனர். எல்லோருடைய கலாச்சாரத்தையும் நாம் கற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: சித்தூரில் உதயமாகிறது வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் புதிய கிளை
நான் பல்கலைக்கழகத்தில் எந்த முடிவு எடுத்தாலும் பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டு தான் எடுப்பேன். ஏனென்றால் அரசு மாணவர்களுக்கு குறைந்த அளவில்தான் செலவு செய்கிறது. பெற்றோர்கள் தான் அதிக பணத்தை செலவழிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 947 கம்பெனிகள் வந்து வேலை வாய்ப்பு வழங்கியது. இந்த ஆண்டு ஏற்கனவே 800 கம்பெனிகள் வந்துள்ளது.இப்போது கடந்த ஆண்டை விட அதிக கம்பெனிகள் வரும் என எதிர்பார்க்கிறோம். நேரம் தவறாமை, ஒழுக்கம் ஆகியவை முக்கியமாகும். இவை இருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு அது பிற்காலத்திற்கு உதவும்” இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் பேசியதாவது, “வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் வரிசையில் 8வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகம் வேலூரில் உள்ளது. இது வேலூர் மக்களுக்கு பெருமை அளிக்க கூடியதாகும். வேலூர் வளாகத்திலேயே 45 ஆயிரம் மாணவர் படிக்கின்றனர். இது மட்டும் இல்லாமல் இன்னும் 3 வளாகங்கள் உள்ளன. கல்லூரியில் மாணவர் பேரவை என்பது ஒரு ஜனநாயக அமைப்பாகும்.
மாணவர்கள் தங்களுக்கு பிரச்சினை என்றால் நேரடியாக டீனிடம் செல்ல முடியாது. அதற்கு பாலமாக மாணவர் பேரவை நிர்வாகிகள் இருந்து செயல்பட வேண்டும். தலைமை பண்பு உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும்.எதிர்காலத்தில் நீங்கள் கடை வைத்தாலும், கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் இந்த தலைமை பண்பு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்” என அவர் பேசினார்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர் நல உதவி இயக்குனர் தினேஷ் ராகவன் நன்றி உரையாற்றினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்