கடலூர்: கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரமேஷ் இந்துமதியின் தங்கையான சூர்யா (33) என்பவரையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெளிநாட்டில் வேலை: இந்நிலையில், ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்த போது, சூர்யா கடலூர் முதுநகரில் வேறு ஒரு நபருடன் திருமண உறவை மீறி தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை ரமேஷ் கண்டித்துள்ளார். இருப்பினும், சூர்யா திருமணத்தை மீறிய உறவை கைவிடவில்லை என்று தெரிகிறது.
இதன் பிறகு ரமேஷ் சொந்த ஊருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்துள்ளார். பின்னர் உறவினர்களும், குடும்பத்தாரும் சமாதானம் பேசி சூர்யாவை, ரமேஷுடன் முறையாக குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
கிளம்பிய வாக்குவாதம்: இதன் பிறகு கடலூர் முதுநகர் சோனகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சூர்யாவுக்கும், ரமேஷுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து, கை மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. சென்னையில் மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு!