சென்னை: கே.கே.நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவர் அதே பகுதியில் உள்ள திமுக பிரமுகர் தனசேகரன் அலுவலகத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். பெயிண்டரான அமுதவல்லியின் கணவர் பொன்வேல், தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு அவ்வவ்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, கணவரைப் பிரிந்து சென்ற அமுதவல்லி, அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். கரோனா காலத்தில், தான் பணிபுரியும் அலுவலகத்திலேயே தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அலுவலகத்தில் பணியில் இருந்த அமுதவல்லியை அவரது கணவர், தனது நண்பர் மணிகண்டனின் உதவியுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து, அமுதவல்லியின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த தனசேகரனின் தலையிலும் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த அமுதவல்லி மற்றும் தனசேகரன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் தொடர்பாக அமுதவல்லி, கே.கே.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பொன்வேல் மற்றும் அவரது நண்பர் மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்.தோத்திரமேரி முன்பு நடந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு மட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பொன்வேல் மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. நெஞ்சை பிசையும் சோகம்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?