கோயம்புத்தூர்: கோவையை மையமாகக் கொண்டு GMR Groups என்ற நிறுவனம் மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் முதலீடு செய்து, கொடுக்கப்படும் டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளனர். இந்த நிறுவனத்தை மைதின் மற்றும் ஃபரிதா என்பவர்கள் இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நிறுவனம் பலரிடம் பெற்ற பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், மோசடி செய்த அந்த நிறுவனத்திடமிருந்து தங்கள் பணத்தை மீட்டுத் தரும்படியும், நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கும் படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இந்த மொபைல் செயலியில் முதலில் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுவிட்டதாகவும். தொடர்ந்து அதிக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி, தங்களை கூடுதல் பணத்தை முதலீடு செய்ய வைத்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதனிடையே, முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்த ஜுபேரியா என்பவர் கூறுகையில், "15 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் தினமும் 540 ரூபாய் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறினர். தொடக்கத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை பணத்தை ஈட்டினோம்.
பின்னர், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் கூடுதலாக பணம் முதலீடு செய்ய வற்புறுத்தினர். எங்களுள் பெரும்பாலான மக்கள் பொருளாதார சிக்கலில் இருப்பதால் கடன் பெற்றும், தாலி உட்பட தங்க நகைகளை அடகு வைத்தும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தோம். ஆனால், இன்று வரை ஒரு ரூபாய் கூட நாங்கள் அதில் இருந்து பணம் சம்பாதிக்கவில்லை. இது குறித்து நிர்வாகத்தினரிடம் கேட்டால் செயலியை அப்டேட் செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி காலத்தை கடத்தி வந்தனர். இதனால், மனஉலைச்சலுக்கு ஆளான சிலர் தற்கொலைக்கும் முயற்சித்தனர்.
இந்நிலையில், தற்போது அவர்களது வங்கிக் கணக்கு முடங்கிவிட்டதாகவும், முழுமையாக நிறுவனத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். அவர்களிடம் முதலீடு செய்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் இவர்களின் ஆசை வார்த்தை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்" என்று ஜுபேரியா வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை சைபர் கிரைமில் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லையா? தென்மண்டல காவல்துறைக்கு முக்கிய உத்தரவு!