சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது..
இதில், ஒட்டுமொத்தமாக 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனையின் பொது 653 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,058 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
தற்போது தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1,085 வேட்பு மனுக்களில் 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து, இறுதியாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்களும் என மொத்தம் 950 வேட்பாளர்கள் என பட்டியலை இறுதி செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பாக, மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், வட சென்னையில் 35 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும், கரூர் தொகுதியைப் பொறூத்தவரை 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2 மனுக்கள் வாபஸ் பெற்று 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 47 ஆண் வேட்பாளர்களும், 7 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இதையும் படிங்க: துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு! - Match Box Allocated For MDMK